இந்தியா பெரும்பாலும் உலகின் நீரிழிவுத் தலைநகரம்என்று கூறப்பட்டாலும், இன்னும் மக்கள் நீரிழிவுக்கான பரிசோதனையை மேற்கொள்வதில்லை! நம்மில் விழிப்புணர்வு அதிகம் உள்ளவர்கள்கூட நீரிழிவுக்கான அடையாளங்களையும் அறிகுறிகளையும் தேடுகிறோம் அல்லது நமக்கு நீரிழிவு இருப்பதற்கான ஆபத்துக் காரணிகள் ஏதேனும் இருக்கின்றனவா என்று பார்க்கின்றோம்

ஆனால், 2ஆம் வகை நீரிழிவு (பெரியவர்களுக்கு வரும் நீரிழிவு) சிக்கல்கள் உருவாகும் வரை வெளியே தெரிவதில்லை. நீரிழிவின் அறிகுறிகள் என விவரிக்கப்படும் அதீத தாகம், பசி மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் என்னும் அறிகுறிகள்கூட ( முறையே பாலிபேஜியா, பாலிடிப்ஸியா மற்றும் பாலியூரியா என்று அழைக்கப்படுகிறது) நீரிழிவு நோயாளிகளில் பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை. முதன்முதலில் வெளிப்படுபவையே நீரிழிவின் சிக்கல்கள்தான் . இந்த அறிகுறிகள் வெளிப்படும் சமயத்தில், நீரிழிவைக் கட்டுப்படுத்துவதற்கான மற்றும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கான அற்புதமான வழிகள் மூடப்பட்டு விடுகின்றன.

இந்தியாவிலுள்ள சில மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட நம்மில் பலரும், ஒருவர் நாற்பது வயதில் நீரிழிவுக்கானப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று நம்புகிறோம். ஆனால் அந்தத் தவறான தகவல், நோய் அறிதலைத் தள்ளிப்போடுவதுடன், தீவிரச் சிக்கல்களை வளரவிட்டு பலருக்குத் தீங்கு விளைவிக்கக்கூடும்.

நீரிழிவுப் பரிசோதனைக்கான பரிந்துரைகள்

இந்திய (ICMR) மற்றும் சர்வதேச (ADA,WHO) வழிகாட்டு நெறிமுறைகள், நீரிழிவுக்கான பரிசோதனையை மேற்கொள்வதற்கு கீழ்கண்ட நெறிமுறைகளைப் பரிந்துரைக்கின்றன.

பெரியவர்களுக்கு

 • அதிக எடை உடையவர்கள் (BMI>23) அல்லது அடிவயிறு பெருத்தவர்கள் (இடுப்பளவு ஆண்களுக்கு 90 செ.மீ அல்லது 35.4 இன்ச் அளவைவிட அதிகமாக இருக்கும் மற்றும் பெண்களுக்கு 80 செ.மீ அல்லது 31.4 இன்ச் அளவைவிட அதிகமாக இருக்கும்)
 • ஓடியாடி வேலை செய்யாத வாழ்க்கைமுறையைப் பின்பற்றுபவர்கள்
 • குடும்பத்தில் பரம்பரையாக நீரிழிவு நோய் உடையவர்கள்
 • உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் அதிக கொழுப்பு அல்லது ட்ரை கிளிசரைடுகள் அல்லது ஈரல் கொழுப்பு நோய் உடையவர்கள்
 • GDM (கர்ப்பக்கால நீரிழிவு) உடைய பெண்கள் அல்லது அளவில் பெரிய குழந்தையைப் பெற்றவர்கள் (பிறக்கும் போது 3.5 கி.கி எடையைவிட அதிகம் உடைய குழந்தை)
 • 30 வயதுக்கு மேற்பட்ட எந்த ஆணும், மேலே கூறப்பட்ட நிலைகளில் இல்லாத போதும்

முன்கூட்டியே செய்யப்படும் நோயறிதல் பரிசோதனைகள் நீரிழிவைக் கண்டறிதல் மூலம் மட்டுமன்றி அதைத் தடுப்பதன் மூலமும், உங்கள் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம். நீங்கள் நீரிழிவுக்கு முந்தைய கட்டத்தில்இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டால், நீரிழிவு ஏற்படுவதைத் தடுக்கலாம் அல்லது தள்ளிப்போடலாம்.  ‘நீரிழிவைத் தடுக்க முடியுமா?’ என்ற கட்டுரையைப் படிக்கவும்

சிறுவர்களுக்கு

அதிக எடை ( BMI அல்லது உயரத்திற்கேற்ற எடைவயதிற்கு 85 சதவீதத்திற்கு அதிகமாக இருத்தல்) உடன்  கீழ்கண்டவற்றில் ஏதேனும் ஒரு உடல்நிலையுடன் உள்ள சிறுவர்கள்:

 • நீரிழிவைக் குறிக்கும் அறிகுறிகள்
 • குழந்தையைக் கருவில் சுமக்கும்போது தாய்க்கு கர்ப்பக்கால நீரிழிவு (GDM) இருந்திருந்தாலோ அல்லது குழந்தை SGA (வழக்கத்தைவிட குறைவான எடை உள்ள குழந்தை) குழந்தையாக இருந்திருந்தாலோ
 • நீரிழிவு உடைய முதல் நிலை அல்லது இரண்டாம் நிலை உறவினர்கள் இருந்தால்
 • உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ள சிறுவர்கள்

இந்தச் சிறுவர்கள் 8-10 வயதில் முதன்முறை நீரிழிவுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்

நீரிழிவுக்கான பொதுவான பரிசோதனைகள் 

 • உணவு உண்ணும் முன் செய்யப்படும் இரத்தச் சர்க்கரைப் பரிசோதனை அல்லது FBG (குறைந்தபட்சம் எட்டு மணிநேரங்கள் உணவு உண்ணாமல் இருக்கவேண்டும்) நீரிழிவுக்கான சிறந்த பரிசோதனை ஆகும் . உணவு உண்ணும் முன் செய்யப்படும் இரத்தச் சர்க்கரைப் பரிசோதனையில் 126 mg/dL சர்க்கரை இருப்பது நீரிழிவு இருப்பதை உறுதிப்படுத்துகிறது, ஆனால் இதற்குக் குறைவான சர்க்கரை நீங்கள் நீரிழிவுக்கு முந்தைய நிலையில்இருப்பதைக் குறிக்கலாம்
 • உணவு உட்கொண்ட பின் செய்யப்படும் நீரிழிவுக்கான பரிசோதனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
  • நீரிழிவுக்கான அறிகுறிகளைக் (அதீத தாகம், பசி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடல் எடை இழப்பு) கொண்டவர்களுக்கு, சாதாரணமாகச் செய்யப்படும் இரத்தச் சர்க்கரைப் பரிசோதனையில் (முந்தைய உணவு எப்போது உண்டோம் என்று சரியாகத் தெரியாத நிலையில் செய்யப்படும் இரத்தச் சர்க்கரைப் பரிசோதனை) சர்க்கரையின் அளவு 200 mg/dL ஐவிட அதிகமாக இருந்தால், அதுவே பயனுள்ளதாகும். ஆனால் இந்தப் பரிசோதனை, நோயை உறுதிசெய்வதற்கான பரிசோதனை அல்ல. நோயை உறுதிசெய்ய, FBG பரிசோதனையை மேற்கொள்வது அவசியம்.
  • FBG பரிசோதனையைச் செய்வதைவிட HbA1c இரத்தப் பரிசோதனையைச் செய்வதில் உள்ள நன்மை என்னவெனில், அதை உணவு உண்ணும் முன்/வெறும் வயிற்றில் செய்யவேண்டியதில்லை. இது நீரிழிவை உறுதிசெய்யும் பரிசோதனையாகப் பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது
 • OGTT (வாய்வழி குளுக்கோஸ் தாங்குதிறன் பரிசோதனை) என்பது உணவு உண்ணும் முன்னும் ஒரு குறிப்பிட்ட அளவு சர்க்கரையை உண்ட இரண்டு மணிநேரத்திற்குப் பின்னும் சர்க்கரையின் அளவுகள் சோதிக்கப்படும் ஒரு பரிசோதனை ஆகும். இது பொதுவாக GDM (கர்ப்பக்கால நீரிழிவு) ஐக் கண்டறியப் பயன்படுகிறது

உண்மையில், சாதாரணமாக நீரிழிவுக்கானப் பரிசோதனையைச் செய்வதைவிட சம்பந்தப்பட்ட அனைத்துப் பரிசோதனைகளையும் ஒரேடியாகச் செய்துவிடுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இரத்தப் பரிசோதனைகள் மட்டுமன்றி உடல் அளவைகள், புற்றுநோய் பரிசோதனை மற்றும் இதய அபாயக் கணக்கீடுகளும் உள்ளடங்கிய விரிவான உடல் பரிசோதனைகளைக் கொண்ட பெரியவர்களுக்கான FHI  உடல் பரிசோதனைப் பட்டியல் மற்றும் FHI உடல் பரிசோதனைப் பட்டியலைப் பார்க்கவும்

பார்க்கவும்நோய் தடுப்பு தொடர்பான உடல் பரிசோதனைகளுக்கான FWI மூல ஆவணங்கள்