இந்தியாவில் புற்றுநோய் ஏற்படும் வீதம் அதிகரித்து வருகிறது, இந்திய மக்களின் மரணத்திற்கு (CVD க்கு அடுத்ததாக) இரண்டாவது மிகப் பெரிய காரணமாக ஏற்கனவே மாறி விட்டது.  உடலின் எந்தப் பகுதியிலும் ஏற்படக் கூடிய எல்லா வகையான புற்றுநோய்களுக்குமான தெளிவான அறிகுறிகள் என்று எதுவுமில்லை. அப்படியெனில், உங்கள் குடும்பத்தில் புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதற்கு அல்லது ஆரம்பநிலையிலேயே அதைக் கண்டறிவதற்கு நீங்கள் என்னதான் செய்ய முடியும்? 

புற்றுநோயை வர வைக்க வாய்ப்புடைய காரணிகளின் பட்டியல் மிகவும் நீளமானது என்றாலும் கூட, குறிப்பிடத்தக்க அபாயக் காரணிகள் எதுவும் இல்லாதவர்களுக்கும் பல நேரங்களில் புற்றுநோய் வருகிறது. எனவே, நிபுணர்களின் ஆலோசனைப்படி, புற்றுநோய் தடுப்பு அமைப்புகளால் செய்யப்படும் புற்றுநோய் பரிசோதனையை அவ்வப்போது செய்து கொள்வதைப் பழக்கமாக்கிக் கொள்வதே மிகச்சிறந்த வழியாக இருக்கும்.  பெரும்பாலும், மருத்துவர்களும் கூட புற்றுநோய் பரிசோதனையைப் பற்றி பரிந்துரைப்பதற்குத் தவறி விடுகிறார்கள். அதனால் இதை உங்கள் பொறுப்பில் எடுத்துக் கொள்வதே சிறந்தது!

இந்திய ஆண்களிடையே மிகவும் பொதுவாக வரக் கூடிய ஐந்து புற்றுநோய்கள்: உதடு மற்றும் வாய் (வாய்க்குழி), நுரையீரல், வயிறு, பெருங்குடல் (மலக்குடல்) மற்றும் தொண்டைக்குழி (தொண்டை). பெண்களிடையே, கருப்பை வாய், மார்பகம், மலக்குடல், உதடு/வாய்க்குழி மற்றும் சினைப்பை ஆகிய இடங்களில் மிகவும் பொதுவாக புற்றுநோய் ஏற்படுகிறது

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நுரையீரல், சினைப்பை மற்றும் வயிற்று புற்றுநோயைத் தவிர்த்து, இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எல்லா புற்றுநோய்களையும், ஆரம்பக்கட்டத்திலேயே தரநிலைப்படுத்தப்பட்ட கண்டறிதல் சோதனைகள் மூலமாக கண்டறிந்து விட முடியும். ஆரம்பக்கட்டத்திலேயே பகுப்பாய்வு செய்து விடுவதன் மூலம், நிவாரணமடையும் வாய்ப்புகள் கணிசமான அளவு அதிகரிக்கிறது மற்றும் புற்றுநோயால் மரணமடைவது குறைகிறது.  ஆனால், இந்தியாவில், பாதிக்கும் மேற்பட்ட புற்றுநோய்கள், மிகவும் முற்றிய நிலையிலேயே முதன்முதலாகக் கண்டறியப்படுகின்றன.

சரி, கண்டறிதல் சோதனைகள் என்பவை என்ன? சோதனை செய்யப்படும் நோயின் எந்தவொரு குறிகள் அல்லது அறிகுறிகளும் இல்லாத நபர்களுக்கு செய்யப்படும் சோதனைகள் கண்டறிதல் சோதனைகள் எனப்படும். நோயாளிகளை இதுவரை பாதிக்கத் தொடங்காத நிலையில், ஆரம்பக்கட்டத்தில் உள்ள நோய்களைக் கண்டறிவதற்கு, இந்தக் கண்டறிதல் சோதனைகள் குறிப்பாக உதவக்கூடியவை. பொதுமக்களுக்கு அல்லது அபாயம் அதிகம் உள்ள குறிப்பிட்ட குழுவினருக்கு இவற்றைப் பரிந்துரைப்பதற்கு முன்பு, உலகெங்கும் உள்ள மருத்துவ நிபுணர் கூட்டமைப்புகள் மற்றும் உடல்நல ஏஜென்சிகள் இந்தச் சோதனைகளின் தரவைச் சேகரித்து, அவற்றின் செயல்திறனைப் பகுப்பாய்வு செய்கின்றனர்.

இதுபோன்ற சரிபார்க்கப்பட்ட கண்டறிதல் சோதனைகளில் பின்வருவனவும் அடங்கும்:

 • பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய்க்கான PAP பரப்பு (ஸ்மியர்)
 • பெண்களிடையே மார்பகப் புற்றுநோய்க்கான SBE (சுய மார்பகப் பரிசோதனை), CBE (மருத்துவ மார்பகப் பரிசோதனை) மற்றும் மாம்மோகிராஃபி
 • FOBT (மலத்தில் மறைந்திருக்கும் ரத்தம் தொடர்பான சோதனை), மலக்குடல் புற்றுநோய்க்கான சிக்மாய்டோஸ்கோபி மற்றும் கோலனோஸ்கோபி
 • வாய்க்குழி மற்றும் உதட்டு புற்றுநோய்க்கான சுய பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனை

புற்றுநோய் தடுத்தல் மற்றும் கண்டறிதலுக்கான பின்வரும் FHI பரிந்துரைகளைக் காணவும்

பெண்களுக்கான கருப்பைவாய் பரிசோதனை

கருப்பை வாய் புற்றுநோய் என்பது, இந்திய பெண்களிடையே மிகவும் பொதுவாகக் காணப்படக்கூடிய புற்றுநோய் ஆகும். இந்தியாவில் ஒவ்வொரு 8 நிமிடத்திற்கும் ஒரு பெண் கருப்பை வாய் புற்றுநோயால் இறக்கிறார். PAP ஸ்மியருக்கான வழிகாட்டுதல்கள் பின்வருமாறு:

 • 21 வயதுக்கு மேற்பட்ட, பாலியல் செயல்பாடுடைய பெண்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பாப் ஸ்மியர் சோதனையை செய்து கொள்ள வேண்டும்.
 • 30-65 வயதுடைய பெண்கள், சிறந்த வழியாக இரட்டை (பாப் ஸ்மியர்+ HPV சோதனை) சோதனையை செய்து கொள்ள வேண்டும், அதில் இயல்பானது என்ற முடிவு வந்தால், பிறகு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்து செய்து கொள்ள வேண்டும். ஆனாலும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பாப் ஸ்மியர் சோதனையை செய்துகொள்வதும் ஏற்கத்தக்கதே.
 • HPV வாக்ஸினைப் பெற்றுக்கொண்ட பெண்களும் கூட, பாப் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்
 • 65 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், பாப் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டியதன் அவசியத்தைப் பற்றி தங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிக்க வேண்டும்.
 • கருப்பை அகற்றப்பட்ட பெண்கள், பாப் ஸ்மியர் சோதனையை செய்து கொள்ள வேண்டியதில்லை.

பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் கண்டறிதல்

 • 20 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள், ஒவ்வொரு மாதமும் (உங்கள் மாதவிடாய் நாட்களுக்குப் பிறகு,) BSE (சுய மார்பகப் பரிசோதனை) செய்து கொள்ள வேண்டும். எப்படி செய்வது என்று அறிய, பின்வரும் இணைப்புகளைக் காணவும்

http://www.breastcancer.org/symptoms/testing/types/sef_exam/bse_steps

SBE செய்து கொள்வது எப்படி – வீடியோ

 • 45-55  வயதுடைய பெண்கள், மருத்துவரின் மூலமாக CBE மற்றும் மாம்மோகிராஃபி ஆகியவற்றை ஆண்டுதோறும் செய்து கொள்ள வேண்டும்
 • 55 வயதுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாம்மோகிராம் செய்து கொள்ள வேண்டும். இயல்பாக இருக்கும் வரை அப்படியே தொடர வேண்டும்
 • பின்வரும் மருத்துவ வரலாறு உடைய பெண்கள், முன்கூட்டியே மாம்மோகிராம்/MRI மற்றும் மரபணு பரிசோதனை ஆகியவற்றை செய்ய வேண்டிய தேவையைப் பற்றி தங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிக்க வேண்டும்:
  • 45 வயதுக்கு முன்பாக, அம்மா, சகோதரி அல்லது உடன்பிறவா சகோதரிக்கு மார்பகப் புற்றுநோய் வந்திருப்பது
  • குடும்பத்தில் ஒரே தரப்பை (தாய்வழி அல்லது தந்தை வழி) சார்ந்த இரண்டு குடும்ப உறுப்பினர்களுக்கு, மார்பகப் புற்றுநோய் இருப்பது
  • ஒரே நபருக்கு இரண்டுக்கும் மேற்பட்ட மார்பகப் புற்றுகள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சினைப்பை புற்றுநோய் வந்திருப்பது
  • குடும்பத்தில், ஆண் மார்பகப் புற்றுநோய் இருப்பது
  • சினைப்பை, கணையம், தைராய்டு, எண்டோமெட்ரியல், சிறுநீரகப் புற்றுநோய், மூளைக் கட்டி, உணவுக்குழாய் புற்றுநோய் போன்றவை உட்பட மூன்றுக்கும் மேற்பட்ட புற்றுநோய்கள் குடும்பத்தில் இருப்பது.

வாய்க்குழி மற்றும் உதட்டுப் புற்றுநோய்க்கான பரிசோதனைகள்

 • எந்த வகையிலாவது, புகையிலை தயாரிப்புகளைப் பயன்படுத்துபவர்கள் மற்றும்/அல்லது மது குடிப்பவர்கள், மாதம் ஒருமுறை வாய் மற்றும் வாய்சார்ந்த (எக்ஸ்ட்ரா-ஓரல்) சுய பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். எப்படி செய்வது என்று அறிந்து கொள்ள, பின்வரும் இணைப்புகளைக் காணவும்: http://www.sixstepscreening.org/self-exam/ அல்லது http://cancerindia.org.in/cp/index.php/know-about-cancer/oral-cancer#early-detection
 • மேலும், இவர்கள் முறையான பல் பரிசோதனையை (ஆறு மாதத்திற்கு ஒருமுறை சிறப்பானது) செய்து கொள்ள வேண்டும், இதில் உங்கள் பல் மருத்துவர் வாய் மற்றும் எக்ஸ்ட்ரா ஓரல் பரிசோதனையை செய்வதும் உள்ளடங்க வேண்டும்.

இந்தப் பரிசோதனைகள் அதிக அபாயத்தில் உள்ளவர்களுக்காகவே பரிந்துரைக்கப்படுகின்றன என்றாலும், அதிக அபாயகரமான நடத்தை இல்லாதவர்களுக்கும் வாய்க்குழி மற்றும் உதட்டு புற்றுநோய்கள் வருகின்றன. எனவே, ஒவ்வொரு மாதமும் அனைவரும் சுய பரிசோதனையை செய்யப் பழகுவது நல்லது.

குடல் புற்றுநோய்/மலக்குடல் புற்றுநோய்க்கான கண்டறிதல் பரிசோதனை

 • குடல் புற்றுநோய் தங்கள் குடும்பத்தில் வந்தது இல்லை என்கிற வரலாறு உடைய 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும், பின்வரும் மலக்குடல் புற்றுநோய்க்கான சோதனை குழுவில் ஒவ்வொன்றில் இருந்தும் ஒவ்வொரு சோதனையை செய்து கொள்ள வேண்டும்

மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்

மலப் பரிசோதனைகள்: 

ஒவ்வொரு ஆண்டும் குவாயிக் அடிப்படையிலான மலத்தில் மறைந்திருக்கும் இரத்தம் தொடர்பான பரிசோதனை (gFOBT)

ஒவ்வொரு ஆண்டும் மலத்தில் நோயெதிர்ப்பு வேதிப்பொருள் சோதனை (FIT)

3 ஆண்டுக்கு ஒருமுறை மலத்தில் டிஎன் ஏ பரிசோதனை (sDNA)

உடலில் ஊடுருவும் பரிசோதனைகள்:  

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோலனோஸ்கோபி மிகச்சிறந்தது, இல்லையென்றால் பின்வருவதில் ஒன்றை செய்து கொள்ளலாம்

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இரட்டை-நிறவேறுபாடு பேரியம் எனிமா

5  ஆண்டுகளுக்கு ஒருமுறை CT கோலனோகிராஃபி (விர்ச்சுவல் கோலனோஸ்கோபி)

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஃப்ளக்ஸிபிள் சிக்மாய்டோஸ்கோபி

 • 60 வயதிற்கு முன்னர்  முதல்நிலை உறவினர் யாருக்காவது அல்லது 2 அல்லது அதற்கு மேற்பட்ட முதல் நிலை உறவினர்களுக்கு எந்த வயதிலும், மலக்குடல் புற்றுநோய் வந்திருக்குக்கும் குடும்ப வரலாறு கொண்ட ஆண்களும் பெண்களும் , 40 வயது முதல் அல்லது நெருங்கிய குடும்பத்தில் புற்றுநோய் வந்திருக்கும் மிக இளவயதிற்கு 10 ஆண்டுக்கு முன்பிருந்து தொடங்கி, 5 ஆண்டுக்கு ஒருமுறை கோலனோஸ்கோபி  செய்து கொள்ள வேண்டும்.

விதைப்பை புற்றுநோய் பரிசோதனை:

50 வயது முதல், ஆண்கள் PSA வழியாக விதைபை புற்றுநோய்க்கான பரிசோதனை செய்து கொள்வதன் நன்மை தீமைகளைப் பற்றி தங்கள் மருத்துவரிடம் பேச வேண்டும், ஏனென்றால், இதன் பலன்களைப் பற்றி தெளிவான விவரங்கள் இல்லை

தங்கள் குடும்பத்தில், முதல் நிலை உறவினர் ஒருவருக்கு 65 வயதுக்கு முன்பாக விதைப்பைப் புற்று நோய் வந்திருக்கும் வரலாறு உள்ள ஆண்கள், மருத்துவருடனான இந்த கலந்தாலோசனையை 45 வயது முதலே மேற்கொள்ள வேண்டும்

கண்டறிதல் பரிசோதனைகளில் ஏதேனும் அசாதரணமான முடிவுகள் கிடைத்தால் என்ன செய்வது?

ஏதேனும் வழக்கத்திற்கு மாறான முடிவுகள் கிடைத்தால், உடனடியாக உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்

நோய் கண்டறிதல் தவிர்த்த, புற்றுநோய் தடுப்பு செயல்திட்டங்கள் பற்றிய FHI –இன் பரிந்துரைகள்

புற்றுநோயின் முன்னெச்சரிக்கை அறிகுறிகளை அறிந்திருத்தல்:

புற்றுநோயின் ஏழு முன்னெச்சரிக்கை அறிகுறிகள் பின்வருமாறு:

 1. காரணமற்ற எடை இழப்பு மற்றும் பசி இழப்பு
 2. வாய்ப்பகுதியில் 2 வாரங்களுக்கும் மேலாக அல்லது உடலின் மற்ற பகுதிகளில் 3 வாரங்களுக்கும் மேலாக ஆறாத புண் அல்லது காயம்
 3. உடலின் ஏதேனும் துவாரத்தின் வழியாக ரத்தம் வருதல் அல்லது ஏதேனும் திரவம்/கசிவு ஏற்படுதல்
 4. விழுங்குவதில் சிரமம்
 5. நாள்பட்ட செரிமானக் கோளாறு அல்லது குடல் இயக்கங்களில் மாற்றம்
 6. நாள்பட்ட இருமல் அல்லது சில வாரங்கள்/மாதங்கள் கால அளவில் குரலில் மாறுபாடு ஏற்படுதல்
 7. வீக்கம் வேகமாக வளர்தல் அல்லது மச்சங்களில் மாற்றம் ஏற்படுதல்

வாழ்க்கைமுறை மாற்றங்களும் அபாயங்களைக் குறைத்தலும்

 1. புகைப்பழக்கத்தை விட்டுவிடுங்கள்.  புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதில் பயன் தரக்கூடிய, மிகப்பெரிய ஒற்றை செயலாக இதுவே இருக்கிறது.
 2. ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள்.  காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகமாகவும், பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைவாகவும் உண்ணுங்கள்
 3. வாக்ஸின் செலுத்திக் கொள்ளுங்கள்.  ஹெபடைடிஸ் பி –க்கான வாக்ஸின் கல்லீரல் புற்றுநோயைத் தடுக்க உதவும் மற்றும் HPV வாக்ஸின் கருப்பை வாய் மற்றும் வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கக் கூடும்
 4. சூரிய ஒளியில் நீண்டநேரம் இருப்பதைத் தவிர்க்கவும் அல்லது சன்ஸ்கிரீன் அணியவும்

எனவே, புற்றுநோய் வராமல் தவிர்ப்பது பல நிலைகளைக் கொண்ட செயல்பாடு என்பதைப் புரிந்துக் கொள்ளலாம். எனவே, இந்த மாற்றங்களைச் செய்யுங்கள், இன்றே செயல்படத் தொடங்குங்கள்